பச்சை சுண்டைக்காயில் இவ்வாறு குழம்பு வைத்து சாப்பிடுங்கள்

நமது முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது சமைத்து விடுவார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு உணவிலும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஏதேனும் ஒரு உணவு வகையை சேர்த்து விடுவார்கள். அவ்வாறு நமது பாரம்பரிய உணவான சுண்டைக்காய் குழம்பை இப்பொழுதெல்லாம் பலரும் மறந்து விட்டனர். சிலருக்கு சுண்டக்காய் வைத்து எப்படி குழம்பு வைக்க வேண்டும் என்றும் தெரியாது. ஆனால் இந்த பச்சை சுண்டைக்காயை கார குழம்பு மாதிரியும், வற்றல் குழம்பு மாதிரியும் செய்தோம் என்றால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: பச்சை சுண்டைக்காய் – 150 கிராம், நல்லெண்ணெய் – 100 கிராம், சின்ன வெங்காயம் – 25, பூண்டு – 15 பல், தக்காளி  2, பச்சை மிளகாய் – 4, புளி – எலுமிச்சை பழ அளவு, தனியாத் தூள் – ஒன்றரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – இரண்டு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை: ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சைப்பழ அளவு புளியை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, அதனை நன்றாக கரைத்து, வடிகட்டி, புளித் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொண்டு, 4 பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பச்சை சுண்டைக்காயை சிறிய உரலில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி 2 முறை நன்றாக கழுவி ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் சுண்டைக்காயையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி அதனுடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு மூடி போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் மூடியைத் திறந்து மிளகாய் தூள் வாசனை சென்று விட்டதா என கவனித்து விட்டு, இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். இந்த குழம்பை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். மணமணக்கும் கிராமத்து பாரம்பரிய சுவையுடன் மிகவும் அற்புதமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *